text
stringlengths
1.4k
2.05k
chunk_id
int64
1
2.29k
author
stringclasses
1 value
genre
stringclasses
1 value
token_count
int64
510
512
சொல்வது?…” “நீ பார்த்தாயா என்ன?” “ஆமாம், பார்க்காமலா? என் நண்பன் கந்தமாறன் என்னை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான். அங்கே பார்த்தேன். அவ்வளவு ஸ்திரீகளிலும் பழுவேட்டரையரின் இளைய ராணி தான் பிரமாத அழகுடன் விளங்கினாள்! மற்ற கருநிறத்து மங்கையர்க்கு நடுவில் அந்த ராணியின் முகம் பூரண சந்திரனைப் போல் பொலிந்தது. அரம்பை, ஊர்வச...
101
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
நடக்கப் போகிறது. அப்போது சொல்கிறேன் என்றான். அவன் பேச்சே மர்மமாயிருந்தது. ஏன், சுவாமிகளே! உங்களுக்கு ஏதாவது தெரியுமா?” “எதைப் பற்றி?” “நாடு நகரமெல்லாம் ஏதேதோ பேசிக் கொள்கிறார்களே? வானத்தில் வால் நட்சத்திரம் காணப்படுகிறது; இராஜாங்கத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கிறது; சோழ சிம்மாசனத்தில் மாறுதல் ஏற்படும்; அப்படி, இப்படி - என்...
102
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
எனக்குத் தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வெறுப்பாகவே இருக்கிறது.” “தம்பி! பெண் பித்துப் பிடித்து அலைகிறவர்கள் சிலர் உண்டு. ஆனால் அவர்களோடு என்னைச் சேர்க்காதே, நான் வேஷதாரி அல்ல. நீ அவ்விதம் சந்தேகிப்பது ரொம்பத் தவறு.” “அப்படியானால் பல்லக்கில் வந்த அந்தப் பெண்ணிடம் ஓலை கொடுக்கும்படி என்னை ஏன் கேட்டீர்?...
103
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பெண் குழந்தை அனாதையாகக் கிடப்பதைக் கண்டார். குழந்தையை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். குழந்தை களையாகவும் அழகாகவும் இருந்தபடியால் குடும்பத்தார் அன்புடன் போற்றிக் காப்பாற்றினார்கள். நந்தவனத்தில் அகப்பட்டபடியால் நந்தினி என்று குழந்தைக்குப் பெயரிட்டார்கள். ஆழ்வார்க்கடியான் அப்பெண்ணைத் தன் தங்கை என்று கருதிப் பாராட்டி ...
104
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
விடுதலை செய்து கொண்டு போகவும் ஆழ்வார்க்கடியான் முயன்று கொண்டிருக்கிறான். இது வரையில் அம்முயற்சியில் வெற்றி பெறவில்லை… இந்த வரலாற்றைக் கேட்ட வந்தியத்தேவனுடைய உள்ளம் உருகிவிட்டது. கடம்பூர் மாளிகையில் பல்லக்கில் இருந்தது நந்தினி இல்லை என்றும், இளவரசன் மதுராந்தகன் என்றும் ஆழ்வார்க்கடியானிடம் சொல்லி விடலாமா என்று ஒரு கணம் ...
105
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
காலத்திலிருந்து மனித குலத்துக்கு வருங்கால நிகழ்ச்சிகளை அறிந்து கொள்வதில் பிரேமை இருந்து வருகிறது. அரசர்களுக்கும் அந்தப் பிரேமை உண்டு; ஆண்டிகளுக்கும் உண்டு; முற்றும் துறந்த முனிவர்களுக்கும் உண்டு; இல்லறத்தில் உள்ள ஜனங்களுக்கும் உண்டு; அறிவிற் சிறந்த மேதாவிகளுக்கும் உண்டு; மூடமதியினர்களுக்கும் உண்டு. இத்தகைய பிரேமை, நாடு...
106
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஆமாம், ஆமாம்! அவர்களைப் பற்றித் தான் கேட்டேன்…” “நன்றாகக் கேள். கேட்க வேண்டாம் என்று யார் சொன்னது? அவர்கள் இரண்டு பேரும் இரண்டு பெண்மணிகள்!” “அது எனக்கே தெரிந்து போய்விட்டது; ஜோதிடரே! நான் குருடன் இல்லை. ஆண்களையும் பெண்களையும் நான் வித்தியாசம் கண்டு பிடித்து விடுவேன். பெண் வேடம் பூண்ட ஆணாயிருந்தால் கூட எனக்குத் தெரிந்த...
107
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தான் சொல்லுவேன்! தம்பி! இதைக் கேள். ஜோதிடன் வீட்டுக்குப் பலரும் வந்து போவார்கள். ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் சொல்லக் கூடாது. இப்போது போனவர்களைப் பற்றி உன்னிடம் சொல்ல மாட்டேன். உன்னைப் பற்றி வேறு யாராவது கேட்டால் அவர்களுக்கும் உன்னைப் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்ல மாட்டேன்.” “ஆகா! ஆழ்வார்க்கடியான்நம்பி தங்களைப் பற்றிச்...
108
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஒன்றும் செய்ய முடியாது.” “நம்புவதும் நம்பாததும் அந்தந்தப் பேச்சைப் பொறுத்திருக்கிறது…” “உதாரணமாக, தங்களிடம் போய்ச் சோதிடம் கேட்டால் நல்லபடி சொல்லுவீர்கள் என்று அவர் கூறியது…” “அவர் பேச்சில் அரை வீசம் உண்மையும் இருக்கும் என்றேனே, அந்த அரை வீசத்தில் அது சேர்ந்தது.” “அப்படியானால் எனக்கு ஏதாவது ஜோதிடம், ஆரூடம் சொல்லுங்கள்;...
109
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கொடி தாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு!” ஜோதிடர் இசைப்புலவர் அல்லவென்பது அவர் பாடும்போது வெளியாயிற்று. ஆயினும் பாடலைப் பண்ணில் அமைத்து மிக விளக்கமாகவும் உருக்கமாகவும் பாடினார். “கவி எப்படியிருக்கிறது?” என்று கேட்டார். “கவி காதுக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என்னுடைய கொடியை ஏதாவது ஒரு மாட்டின் ...
110
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஜோதிடரே! தங்களைப் போன்ற சாமர்த்தியசாலியை நான் பார்த்ததேயில்லை!” என்றான். “முகஸ்துதி செய்யாதே, தம்பி!” என்றார் ஜோதிடர். “இருக்கட்டும். கேட்க வேண்டியதைத் தெளிவாகவே கேட்டு விடுகிறேன். தஞ்சாவூரில் சக்கரவர்த்தியைத் தரிசிக்க விரும்புகிறேன், அது சாத்தியமாகுமா?” “என்னைவிடப் பெரிய ஜோதிடர்கள் இருவர் தஞ்சாவூரில் இருக்கிறார்கள் அவ...
111
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
யின் திருக்குமாரி குந்தவைப் பிராட்டிதான் அவ்விதம் பெண்ணரசு செலுத்துவதாகச் சொல்கிறார்கள்!” ஜோதிடர் சற்றே வந்தியத்தேவன் முகத்தை உற்றுப் பார்த்தார். சற்றுமுன் அந்த வீட்டிலிருந்து சென்றது குந்தவை தேவி என்று தெரிந்து கொண்டுதான் அவ்விதம் கேட்கிறானோ என்று முகத்திலிருந்து அறிய முயன்றார். ஆனால் அதற்கு அறிகுறி ஒன்றும் தெரியவில்ல...
112
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
நாள் இருக்கிறது. ஆகையால் மேலும் மேலும் சோழ மகாராஜ்யம் வளர்ந்து கொண்டேயிருக்கும்..” “இத்தனை நேரம் தங்களுடனே பேசியதற்கு இந்த ஒரு விஷயம் தெளிவாகச் சொல்லி விட்டீர்கள். வந்தனம், இன்னும் ஒரு விஷயம் மட்டும் முடியுமானால் சொல்லுங்கள். எனக்கு கப்பல் ஏறிக் கடற் பிரயாணம் செய்ய வேண்டும் என்ற விருப்பம் ரொம்ப நாளாக இருக்கிறது…” “அந்...
113
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ுமிகள் துருவ நட்சத்திரத்தைக் குறிகொள்வது போல், வாழ்க்கைக் கடலில் இறங்கும் உன் போன்ற வாலிபர்கள் அருள்மொழிவர்மரைக் குறியாக வைத்துக்கொள்வது மிக்க பலன் அளிக்கும்.” “அப்பப்பா! இளவரசர் அருள்மொழிவர்மரைப் பற்றி எவ்வளவெல்லாம் சொல்கிறீர்கள்? காதலனைக் காதலி வர்ணிப்பது போல் அல்லவா வர்ணிக்கிறீர்கள்?” “தம்பி! காவிரி தீரத்திலுள்ள சோழ...
114
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாக...
115
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிசபட்சணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான்; எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன. ஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக்களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல் தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் ...
116
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மெல்ல செலுத்திக் கொண்டு சென்றான். அவனுடைய கண்களுக்கு நிறைய வேலை இருந்தது. மனமும் இந்தப் பல்வேறு காட்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது. ஆயினும் அவன் உள்மனத்திலே இலேசாகப் பனியினால் மூடுண்டது போல், ஒரு பெண்ணின் முகம் தெரிந்து கொண்டேயிருந்தது. ஆகா! அந்தப் பெண் அவளுடைய செவ்விதழ்களைத் திறந்து தன்னுடன் சில வார்த்தை பேச...
117
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
யக் குரலையும் கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குதிரையைத் தட்டி விட்டான். அந்தப் பெண்கள் இருந்த இடம் இரு மரங்களின் இடைவெளி வழியாக அவனுக்குத் தெரிந்தது. அவர்களில் பலருடைய முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அதிசயம்! அதிசயம்! அவர்களிலே இருவர் ஜோதிடர் வீட்டிற்குள்ளே வந்தியத்தேவன் பிரவேசித்ததும் புறப்பட்டுச் சென்றவர்கள்...
118
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கேட்டது. வந்தியத்தேவன் காதுக்கு அது நாராசமாயிருந்தது. இத்தகைய அபாயகரமான வேளையில் எதற்காக அவர்கள் சிரிக்கிறார்கள்? பாய்ந்து ஓடி வந்தவன் ஒரு கணம் திகைத்து நின்றான். அப்பெண்களின் முகங்களைப் பார்த்தான். பயமோ பீதியோ அம்முகங்களில் அவன் காணவில்லை. அதற்கு மாறாகப் பரிகாசச் சிரிப்பின் அறிகுறிகளையே கண்டான். சற்றுமுன், “ஐயோ ஐயோ!” ...
119
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தொலைக்கிறாள். தாய் தகப்பனார் இல்லாத பெண்ணை நம்மை நம்பி ஒப்புவித்திருக்கிறார்களே என்று இளையபிராட்டிக்குக் கவலை. அதனால்தான், வானதிக்கு என்ன வந்துவிட்டது என்று கேட்கச் சோதிடரிடம் அழைத்துப் போயிருக்கிறார்! ஏதாவது பேய் பிசாசுகளின் சேஷ்டையாயிருக்கலாம் அல்லவா? அப்படியிருந்தால் ஏதாவது மந்திரம் கிந்திரம் போட்டு ஓட்ட வேண்டும் அல...
120
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மயக்கம் போட்டு விழுந்து விட்டாள் என்றால், அவளைப் பார்த்து விசாரியாமல் போவாராடி? அதிலிருந்து நீ ஒன்றும் அர்த்தம் கற்பிக்க வேண்டாம்!” என்றாள் தாரகை. “இளவரசரைப் பற்றி நீ சொல்வது உண்மைதான். அவரைப் போன்ற குணசாலி இந்த ஈரேழு பதினாலு உலகத்திலும் வேறு யார் இருக்க முடியும்? கதைகளிலும் காவியங்களிலும் கூடக் கிடையாது; ஆனால் நான் சொ...
121
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
முதலையின் உடலைப் பதப்படுத்தி உள்ளே பஞ்சும் நாரும் திணித்து வைத்திருந்த பொம்மை முதலை. அதை எடுத்து வெளியில் வைத்துக் கொண்டார்கள். படகைச் சிறிது தூரம் செலுத்திக் கொண்டு சென்று, நதிக்கரை ஓரத்தில் பெரிய பெரிய வேர்கள் விட்டு வளர்ந்திருந்த ஒரு பெருமரத்தின் அருகில் வந்தார்கள். அம்மரத்தின் ஓரத்தில் அத்தோல் முதலையை எடுத்து விட்...
122
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
? இளவரசர் ‘நான் எப்போதாவது கலியாணம் செய்து கொண்டால் தமிழகத்துப் பெண்ணைத்தான் மணந்து கொள்வேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம்! உங்களுக்கெல்லாம் இது தெரியாதா?” என்றாள் செந்திரு. “அப்படியானால் மிகவும் நல்லதாய்ப் போயிற்று. நாம் எல்லோரும் சேர்ந்து தனித்தனியே நம் கைவரிசையைக் காட்ட வேண்டியதுதானே? இந்த வானதியினால் முடிகிற க...
123
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சேவூர் என்னுமிடத்தில் சோழ சைன்யத்துக்கும் பாண்டிய சைன்யத்துக்கும் பெரும் போர் நடைபெற்றது. அச்சமயம் மதுரை மன்னனாயிருந்த வீரபாண்டியனுக்குத் துணை செய்வதற்காகச் சிங்கள நாட்டு அரசன் மகிந்தன் ஒரு பெரிய சேனையை அனுப்பியிருந்தான். சோழர்களின் மாபெரும் வீர சைன்யம் பாண்டியர்களுடைய சேனையையும் சிங்கள நாட்டுப் படையையும் சேவூரில் முறி...
124
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
என்று சரித்திரக் கல்வெட்டுக்களில் பெயர் பெற்றான். இந்த செய்தியானது பாலைவனத்தில் மலைக் குகையில் ஒளிந்து கொண்டிருந்த வீரபாண்டியனுக்கு எட்டியதும் அம்மன்னன் மீண்டும் துணிவு கொண்டு வெளிவந்தான். மறுபடியும் பெருஞ் சேனை திரட்டிப் போரிட்டான். இம்முறை பாண்டிய சேனை அதோகதி அடைந்ததுடன், வீரபாண்டியனும் உயிர் துறக்க நேர்ந்தது. இந்தப்...
125
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இச்சமயம் சோழ நாட்டுத் தலைவர்களிடையிலே போட்டி மூண்டது. இந்தப் போட்டியை அடியோடு நீக்கி அனைவரையும் சமாதானப்படுத்தும்படியாகச் சுந்தர சோழ மன்னரின் இளம் புதல்வர் அருள்மொழிவர்மர் முன்வந்தார். “அப்பா! பழையாறை அரண்மனையில் அத்தைகளுக்கும் பாட்டிகளுக்குமிடையில் இத்தனை நாள் நான் செல்லப்பிள்ளையாக வளர்ந்தது போதும். தென் திசைச் சைன்ய...
126
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ிராட்டி எண்ணியிருந்தாள். குந்தவையிடம் அருள்மொழியும் அதற்கிணையான வாஞ்சை வைத்திருந்தார். தமக்கை இட்ட கோட்டைத் தம்பி தாண்டுவது கிடையாது. இளையபிராட்டி ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்; அதற்கு மாறாகப் பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் சேர்ந்து வந்து சொன்னாலும் அருள்மொழிவர்மர் பொருட்படுத்த மாட்டார். தமக்கையின் வாக்கே தம்பிக்க...
127
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
போவது என்பது பற்றி விவாதம் எழுந்த போது அதற்குரியவன் அருள்மொழிதான் என்ற முடிவுக்கு வந்தாள். “தம்பி, அருள்மொழி! உன்னை ஒருகணம் பிரிந்திருப்பதென்றாலும் எனக்கு எத்தனையோ கஷ்டமாகத்தானிருக்கிறது. ஆயினும் நானே உன்னைப் போகச் சொல்ல வேண்டிய சமயம் வந்து விட்டது. இலங்கைப் படையின் தலைவனாக நீதான் போக வேண்டும்!” என்றாள். இளவரசர் குதூகல...
128
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
வாசலின் முகப்பில், அருள்மொழிவர்மர் வீதி வாசற்படியில் இறங்க வேண்டிய இடத்தில், குந்தவைதேவியின் தோழிப் பெண்கள் கைகளில் தீபமேற்றிய தங்கத் தட்டுகளை ஏந்திக் கொண்டு நின்றார்கள். தோழிப் பெண்கள் என்றால், சாமான்யப்பட்டவர்களா? தென்னாட்டிலுள்ள புகழ்பெற்ற சிற்றரசர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பழையாறை அரண்மனையில் செம்பியன் மா...
129
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சுருண்டு விழுந்ததைப் பார்த்துவிட்ட அருள்மொழிவர்மர் தாம் குதிரை மீது ஏறுவதற்கு முன்னால், “விழுந்த பெண்ணுக்கு எப்படியிருக்கிறது? மயக்கம் தெளிந்ததா?” என்று விசாரித்துவர ஆள் அனுப்பினார். விசாரிக்க வந்தவனிடம் குந்தவைதேவி, “இளவரசரை இங்கே சிறிது வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல்லு!” என்று திருப்பிச் சொல்லி அனுப்பினாள். தமக்க...
130
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தெல்லாம் ஒரு கணத்தில் நினைவு வந்தது. “அக்கா! இந்த மாதிரி செய்து விட்டேனே?” என்று கண்களில் நீர்மல்கக் கூறினாள். இதற்குக் குந்தவை மறுமொழி சொல்வதற்குள் இளவரசர், “அதற்காக நீ ஒன்றும் கவலைப்பட வேண்டாம். வானதி! தவறுவது யாருக்கும் நேரிடுகிறதுதான். மேலும் உனக்கு அவ்விதம் நேருவதற்கு முக்கியக் காரணமும் இருக்கிறது; அதைத் தான் இளைய...
131
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
குந்தவைப்பிராட்டி அவளுக்குத் தக்க சிகிச்சை செய்து திரும்ப உணர்வு வருவித்தாள். மூர்ச்சை தெளியும்போது வானதி விம்மி விம்மி அழுது கொண்டே எழுந்திருப்பாள். “என்னடி, அசடே! எதற்காக இப்படி அழுகிறாய்!” என்று குந்தவை கேட்பாள். “தெரியவில்லையே, அக்கா! மன்னியுங்கள்!” என்பாள் வானதி. குந்தவை அவளைக் கட்டிக் கொண்டு உச்சி மோந்து ஆறுதல் க...
132
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சுட்டிக்காட்டிக் கொண்டே, “முதலை! முதலை!” என்று அலறினாள். உடனே எல்லாப் பெண்களும் சேர்ந்து, “ஐயோ! முதலை! பயமாயிருக்கிறதே!” என்றெல்லாம் கூச்சலிட்டுக் கொண்டு ஓடினார்கள். ஆனால் பயந்த சுபாவமுள்ள வானதி மட்டும் அச்சமயம் சிறிதும் பயப்படவில்லை. திறந்த வாயுள்ள பயங்கர முதலையைத் திடீரென்று சமீபத்தில் கண்டும் அவள் பீதி அடைந்து விடவ...
133
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
குடந்தையில் நீங்கள் அவசரப்பட்டுச் சோதிடர் வீட்டுக்குள்ளே வந்ததற்காக வருத்தம் தெரிவித்தீர்கள். அதற்கு மறுமொழி சொல்லாமலே நாங்கள் வந்து விட்டோம். இதிலிருந்து சோழ நாட்டுப் பெண்களே மரியாதை அறியாதவர்கள் என்ற கருத்து உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம். அப்படி நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டாம். என்னுடன் வந்த பெண்ணுக்குத் திடீரென்று மயக...
134
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ிருந்த தன் வேலை அசைத்து எடுத்தான்! வேல் குத்தியிருந்த துவாரத்தின் வழியாக இரத்தம் பீறிட்டுக் கொண்டு வரவில்லை! பின், என்ன வந்தது? கொஞ்சம் வாழைநாரும் பஞ்சும் வௌிவந்தன! மறுபடியும் அந்தத் துஷ்டப் பெண்கள் சிரித்தார்கள். இம்முறை கெக்கலி கொட்டிப் பலமாகச் சிரித்தார்கள். வல்லவரையனுடைய உள்ளமும் உடலும் குன்றிப் போயின. இம்மாதிரி அவ...
135
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
குதிரை நதிக் கரைச் சாலையின் வழியாகப் பிய்த்துக் கொண்டு பாய்ந்தோடியது. சிறிது நேரம் வரையில் குந்தவைப்பிராட்டி குதிரை போன திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரை கிளப்பிய புழுதி அடங்கும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றாள். பின்னர், தோழிப் பெண்களைத் திரும்பிப் பார்த்து, “பெண்களா! உங்களுக்கு மட்டுமரியாதை இன்னும் தெரியவ...
136
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இந்த மரத்தின் மேலே ஒரு வேதாளம் இருக்கிறது; அதனோடு சிறிது சல்லாபம் செய்தேன்!” என்றான் திருமலையப்பன். “ஓஹோ! அப்படிங்களா! அந்த வேதாளம் சைவமா? வைஷ்ணவமா?” என்றான் அந்த ஆள். “அதைத்தான் நானும் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்குள்ளே நீ வந்து குறுக்கிட்டாய். வேதாளம் மறைந்து விட்டது; போனால் போகட்டும்! உன் பெயர் என்ன அப்பனே?” “எதற்க...
137
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஆசை அதிகமோ?” “சேச்சே! அந்த மாதிரியெல்லாம் சொல்லாதே அப்பனே! அது போனால் போகட்டும். நம்மோடு படகிலே ஒரு வீர சைவர் வந்தாரே, அவர் எந்தப் பக்கம் போனார் பார்த்தாயா?” “பார்க்காமலென்ன? பார்த்தேன் நான் குதிரை வாங்கப் போன பக்கந்தான் அவரு வந்தார்; உங்களைப் பற்றித் திட்டிக் கொண்டே வந்தார்…” “என்னவென்று என்னைத் திட்டினார்?” “உங்களை ...
138
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
படகோட்டிகளில் ஒருவன், “அக்கரைக்கு வருகிறாயா, அப்பா?” என்று கேட்டான். “இல்லை, அடுத்த படகில் வரப் போகிறேன்; நீ போ!” என்றான் இடும்பன்காரி. “அடே! இவ்வளவுதானா? நீ வருகிற வேகத்தைப் பார்த்துவிட்டு அல்லவா படகை நிறுத்தினேன்!” என்று சொல்லி ஓடக்காரன் கோல் போட்டு ஓடத்தை நதியில் செலுத்தினான். இதற்குள் அரசமரத்தின் நடுமத்தி வரையில் ஏ...
139
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பார்த்திருந்தாலும் திருமலை நன்றாகத் தம் திருமேனியை மறைத்துக் கொண்டிருந்தபடியால் மரத்தின் மேல் அவன் உட்கார்ந்திருப்பது இடும்பன்காரிக்குத் தெரிந்திராது. சுமார் ஒரு நாழிகை நேரம் இவ்விதம் சென்றது. திருமலைக்குக் கால்கள் மரதுப் போகத் தொடங்கின. இனி வெகு நேரம் மரத்தின் மேல் இருக்க முடியாதென்று தோன்றியது. இடும்பனோ, மரத்தடியிலிர...
140
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கொண்டிருந்தேன்.” “நானும் உன்னைத் தேடிக் கொண்டு தான் வந்தேன்.” “நாம் எந்தத் திசையில் போக வேண்டும்?” “மேற்குத் திசையில்தான்!” “எவ்விடத்துக்கு?” “பகைவனின் பள்ளிப்படைக்கு!” “திருப்புறம்பயம் அருகில்…” “இரைந்து பேசாதே! யார் காதிலாவது விழப் போகிறது” என்று சொல்லிச் சோமன் சாம்பவன் நாலாபக்கமும் பார்த்தான். “இங்கே ஒருவரும் இல்லை...
141
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மோ சற்றுத் தூரத்தில் இருக்கிறது அங்கே எதற்காக இவர்கள் போகிறார்கள்! இந்த இரண்டு பேரும் மட்டும் பேச வேண்டிய விஷயமாயிருந்தால், இங்கேயே பேசிக்கொள்ளுவார்கள். காட்டு வழியில் ஒரு காத தூரம் போக வேண்டியதில்லையே? ஆகையால், அங்கே இன்னும் சிலரும் வரப் போகிறார்கள் என்பது நிச்சயம். எதற்காக? பிரிதிவீபதியின் பள்ளிப்படையைப் ’பகைவனின் பள...
142
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஞாபகமாக எடுத்தது. உலக சரித்திரம் அறிந்தவர்கள் வாடர்லூர்ச் சண்டை, பானிபெத் சண்டை, பிளாசிச் சண்டை போன்ற சில சண்டைகளின் மூலம் சரித்திரத்தின் போக்கே மாறியது என்பதை அறிவார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் திருப்புறம்பயம் சண்டை அத்தகைய முக்கியம் வாய்ந்தது. நமது கதை நடந்த காலத்துக்குச் சுமார் நூறு ஆண்டு காலத்துக்கு முன்னால்...
143
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மகனுக்குப் பட்டங்கட்டி விட்டு ஓய்ந்திருந்தார். அச்சமயத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பகைமை முற்றி அடிக்கடி சண்டை நடந்து கொண்டிருந்தது. அந்தக் காலத்துப் பாண்டிய மன்னனுக்கு வரகுணவர்மன் என்று பெயர்; பல்லவ அரசனுக்கு அபராஜிதவர்மன் என்று பெயர். இந்த இரண்டு பேரரசர்களுக்குள் நடந்த சண்டைகள் பெரும்பாலும் சோழ நாட்டில்...
144
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ரத, கஜ, துரக, பதாதிகள் என்னும் நாலுவகைப் படைகளும் போரில் ஈடுபட்டிருந்தன. மலையோடு மலை முட்டுவது போல் யானைகள் ஒன்றையொன்று தாக்கிய போது நாலா திசைகளும் அதிர்ந்தன. புயலோடு புயல் மோதுவது போல் குதிரைகள் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்த போது குதிரை வீரர்களின் கையிலிருந்த வேல்கள் மின்வெட்டுகளைப் போல் பிரகாசித்தன. ரதத்தோடு ரதம் மோதிச்...
145
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
வடக்கே போய்விட்டால், சோழ நாடு மறுபடியும் நெடுங்காலம் தலையெடுக்க முடியாது என்பதை உணர்ந்திருந்த அந்தக் கிழச் சிங்கத்தின் கர்ஜனை, பல்லவர் கட்சியில் எஞ்சியிருந்த வீரர்களுக்குப் புத்துயிர் அளித்தது. “ஒரு யானை! எனக்கு ஒரு யானை கொடுங்கள்!” என்றான். “நமது யானைப் படை முழுதும் அதமாகி விட்டது; ஒன்று கூடத் தப்பவில்லை” என்றார்கள்....
146
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கொண்டு தாங்களும் போர்முனையில் புகுந்தார்கள். அவ்வளவுதான்; தேவி ஜயலக்ஷ்மியின் கருணாகடாட்சம் இந்தப் பக்கம் திரும்பி விட்டது. பல்லவர் படைத் தலைவர்கள் பின்வாங்கிக் கொள்ளிடத்துக்கு வடகரை போகும் யோசனையைக் கைவிட்டார்கள். மூன்று வேந்தர்களும் தமக்குரிய மூலபல வீரர்கள் புடைசூழப் போர்முனையில் புகுந்தார்கள். சிறிது நேரத்துக்கெல்லாம...
147
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இருட்டி ஒரு நாழிகை; இரண்டு நாழிகை; மூன்று நாழிகையும் ஆயிற்று. சுற்றிலும் சூழ்ந்திருந்த அந்தகாரம் அவனை அடியோடு அமுக்கி, மூச்சுத் திணறச் செய்தது. அவ்வப்போது காட்டு மரங்களினிடையே சலசலவென்று ஏதோ சத்தம் கேட்டது. அதோ ஒரு மரநாய் மரத்தின் மேல் ஏறுகிறது! அதோ ஒரு ஆந்தை உறுமுகிறது! இந்தப் பக்கம் ஒரு கோட்டான் கூவுகிறது! மரநாய்க்க...
148
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
படையாம்! பகைவன் பள்ளிப்படைக்கு அருகில் கூடி யோசிக்கப் போகிறார்களாம். செத்துப் போனவர்களின் பெயரால் உயிரோடிருப்பவர்களை இம்சிப்பதற்கு! வானத்து விண்மீன்களே! நீங்கள் ஏன் சிரிக்க மாட்டீர்கள்? நன்றாய்ச் சிரியுங்கள்! “கடவுளே! இங்கு வந்தது வீண்தானா? இன்றிரவெல்லாம் இப்படியே கழியப் போகிறதா? எதிர்பார்த்த ஆட்கள் இங்கே வரப்போவதில்லை...
149
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கையில் ஒரு பை கொண்டு வந்திருந்தான். அதை அவன் அவிழ்த்து அதனுள் இருந்தவற்றைக் கொட்டினான். சுளுந்து வெளிச்சத்தில் தங்க நாணயங்கள் பளபளவென்று ஒளிர்ந்தன. கொட்டிய மனிதன் பைத்தியம் பிடித்தவனைப் போல் சிரித்து, “நண்பர்களே! சோழ நாட்டுப் பொக்கிஷத்தைக் கொண்டே சோழ ராஜ்யத்துக்கு உலைவைக்கப் போகிறோம்! இது பெரிய வேடிக்கையல்லவா?” என்று ச...
150
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
உதவியை ஆழ்வார்க்கடியான் மனத்திற்குள் பெரிதும் பாராட்டினான். ஏனெனில், காட்டின் மத்தியில் கூடியிருந்த சதிகாரர்கள், சிறகடித்துக் கொண்டு உறுமிய ஆந்தையைப் பார்த்து அதனால் ஏற்பட்ட சத்தந்தான் என்று எண்ணிக் கொண்டார்கள். “அடே! இந்தக் கோட்டான் நம்மைப் பயப்படுத்திவிட்டது! வெட்டுடா அதை!” என்றான் ஒருவன். “வேண்டாம்! உங்கள் கத்திகளை...
151
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
யார் ஆயத்தமாயிருக்கிறீர்கள்?” என்றான் ரவிதாஸன். “நான் போகிறேன்!”, “நான்தான் போவேன்!” என்று பல குரல்கள் ஒரே சமயத்தில் கேட்டன. “யார் போகிறது என்பதை அடுத்த முறை பாண்டிய நாட்டில் கூடித் தீர்மானிக்கலாம்! அதுவரைக்கும் இங்கே செய்ய வேண்டிய ஏற்பாடுகள் இன்னும் சில இருக்கின்றன!” என்றான் ரவிதாஸன். “ஈழத்துக்கு எந்த வழி போவது நல்லது...
152
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
எங்கிருந்து எந்த வழியாக வந்தீர்கள்?” என்றான். “கொள்ளிடக் கரையோடு வந்தோம், வழியில் ஒரு கூட்டம் நரிகள் வளைத்துக் கொண்டன. நரிகளிடம் சிக்காமல் தப்பித்து வருவதற்கு நேரம் ஆகிவிட்டது!” என்றான் சோமன் சாம்பவன். “புலிக்கும், சிங்கத்துக்கும் பயப்பட்டால் பொருள் உண்டு. நரிக்குப் பயப்படுகிறவர்களால் என்ன காரியத்தைச் சாதித்துவிட முடி...
153
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மழுவரையர் முதலிய பலர் வந்திருந்தார்கள். குரவைக் கூத்தும் வேலனாட்டமும் நடைபெற்றன. வேலனாட்டம் ஆடிய தேவராளனுக்குச் சந்நதம் வந்து குறி சொன்னான். அவன் சொன்னது நம்முடைய நோக்கத்துக்கு அனுசரணையாகவே இருந்தது. பழுவேட்டரையருடன் வந்த மூடு பல்லக்கில் அவருடைய இளையராணி வந்திருப்பதாக எல்லாரும் எண்ணியிருந்தார்கள். சுந்தர சோழ மகாராஜாவு...
154
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
“ஆஹா! அவன் யார்?” “முன் குடுமி வைத்திருந்த ஒரு வைஷ்ணவன்…” “ஆகா! அவன்தானா? அப்படி நான் நினைத்தேன்! அவனை நீர் என்ன செய்தீர்? சம்புவரையரிடம் பிடித்துக் கொடுக்கவில்லையா?” “இல்லை. ஒருவேளை அவன் நம்மவனாயிருக்கலாம் என்று நினைத்து விட்டேன். நீங்களே அனுப்பி வைத்தீர்களோ என்று எண்ணினேன்.” “பெரிய பிசகு செய்து விட்டீர்; அவன் நம்மவன்...
155
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கொள்ளிடத்தின் தென்கரையில் அவன் எனக்காக காத்துக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. நம்முடைய அந்தரங்க சமிக்ஞையைச் செய்து காட்டினேன். ஆனால் அவன் புரிந்து கொள்ளவில்லை. அதன் பேரில் அவன் நம்மவன் அல்ல என்று தீர்மானித்தேன்…” “நீர் செய்தது பெரும் பிசகு! முன்பின் தெரியாதவர்களிடம் நம் சமிக்ஞையைச் செய்து காட்டக் கூடாது. நண்பர்களே! இதைக்...
156
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
காலம் சந்தேகமாகத்தானிருந்தது. சுந்தர சோழரின் ஒற்றனோ, ஆதித்த கரிகாலனின் ஒற்றனோ என்று சந்தேகப்பட்டேன்; இல்லையென்று கண்டேன். பழையாறையில் இருக்கிறாளே, ஒரு கிழப் பாதகி, அந்தப் பெரிய பிராட்டியின் ஒற்றனாயிருக்கலாம் என்று இப்போது சந்தேகிக்கிறேன்.” “ஆகா! அப்படியா? சிவபக்தியில் மூழ்கி, ஆலயத் திருப்பணி செய்து வரும் அந்தச் செம்பிய...
157
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ி விட்டது. போதும் போதாதற்கு அந்தச் சமயம் பார்த்து அவனுக்குத் தும்மல் வந்தது. எவ்வளவோ அடக்கிக் கொள்ளப் பார்த்தும் முடியவில்லை. துணியை வாயில் வைத்து அடைத்துக் கொண்டு ’நச்’சென்று தும்மினான். அந்தச் சமயம் மேலக்காற்று நின்றிருந்தது; காட்டு மரங்களின் மர்மர சத்தமும் நின்று போயிருந்தது. ஆகையால் திருமலையப்பனின் அடக்கிய தும்மல் ...
158
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தன்னைத் தாக்கியது பற்றி விவரம் கூறத் தொடங்கினான். இதெல்லாம் திருமலையப்பனின் காதில் கொஞ்ச தூரம் வரையில் கேட்டுக் கொண்டிருந்தது. புது வெள்ளம் - அத்தியாயம் 21 ** திரை சலசலத்தது!** ஒரே சமயத்தில் ஒருவனுக்குள்ளே இரண்டு மனங்கள் இயங்க முடியுமா? முடியும் என்று அன்றைக்கு வந்தியத்தேவனுடைய அனுபவத்திலிருந்து தெரிய வந்தது. சோழ வள...
159
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அடித்தார்கள்? அடியோடு அழித்து விடத்தானே பார்த்தார்கள்? ஆ! அது என்ன பாடல்? இதோ ஞாபகம் வந்து விட்டது! “சேனை தழையாக்கிச் செங்குருதி நீர்தேக்கி ஆனை மிதித்த அருஞ்சேற்றில் - மானபரன் பாவேந்தர் தம்வேந்தன் வாணன் பறித்து நட்டான் மூவேந்தர் தங்கள் முடி!” இப்படியெல்லாம் போர்க்களத்தில் கொடூரமான காரியங்களை நம் முன்னோர்களும் செய்திர...
160
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ங்கிலை பார்த்ததும் அவளுடைய தோள்கள் நினைவு வந்தன. ஓடைகளில் மண்டிக் கிடந்த குவளை மலர்கள் அவளுடைய கண்களுக்கு உவமையாயின. பங்கஜ மலர்கள் அவளுடைய தங்க முகத்துக்கு இணைதானா என்ற ஐயம் தோன்றியது. நதியோர மரங்களில் குலுங்கிக் கொண்டிருந்த மலர்களில் வண்டுகள் செய்த ரீங்காரத்தை அவள் குரலின் ஒலிக்கு உவமை சொல்வது சரியாகுமா? இப்படியெல்லாம...
161
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சோழ சக்கரவர்த்தி செய்து வருவதே அவ்வளவு சிலாக்கியமில்லைதான்! பழுவேட்டரையர் போன்றவர்களுக்கு இவ்வளவு அதிகாரமும் செல்வாக்கும் அவர் அளித்திருக்கக் கூடாது. அதிலும் மணி மணியாக இரண்டு அருமைப் புதல்வர்கள் இருக்கும்போது? நாடெல்லாம் அதிசயிக்கும் அறிவும் திறனும் உடைய புதல்வி ஒருத்தி இருக்கும் போது…? அந்த மங்கை, சோதிடர் வீட்டில் ப...
162
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
யிருக்கிறது? சம்பந்தப் பெருமான் என்ன சொல்லியிருக்கிறார்? இதோ ஞாபகம் வருகிறது? திருவையாற்று வீதி முனை அரங்கங்களில் பெண்கள் நடனம் ஆடுகிறார்கள். இந்த ஆடலுக்கேற்ற பாடலோடு மத்தளச் சத்தமும் முழங்குகிறது. அந்த முழக்கத்தைக் கேட்ட குரங்குகள் மேகங்களின் கர்ஜனை என்று எண்ணி உயர்ந்த மரங்களின் உச்சாணிக் கிளைகளில் ஏறி மழை வருமா என்று...
163
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
! ஏன்? அதோ சம்பந்தரின் தேவாரத்தையே யாரோ இனிய குரலில் அருமையாகப் பாடுகிறார்களே? இசைக்கும் கலைக்கும் என்றே இறைவன் பணித்த ஊர் இந்தத் திருவையாறு போலும்! இந்த ஊரில் கட்டாயம் ஒரு நாள் தங்கிப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும்! தஞ்சாவூருக்கு அவசரமாகப் போய்த்தான் என்ன பயன்? கோட்டைக்குள் பிரவேசிக்க முடிகிறதோ என்னமோ? அப்படிப் பி...
164
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
த்துக்காக இளவரசர் மதுராந்தகர் வெளிப்பட்டு வரலாம். அச்சமயம் அவருடன் பழக்கம் செய்து கொள்ளலாம். அது தஞ்சாவூர்க் கோட்டைக்குள் பிரவேசிக்கவும், சக்கரவர்த்தியைப் பார்க்கவும் பயன்படலாம். அதற்குத் தகுந்தபடி ஏதாவது கொஞ்சம் பேசி வேஷம் போட்டால் போகிறது. தந்திர மந்திரங்களைக் கையாளாவிட்டால் எடுத்த காரியம் கைகூடாது அல்லவா? அதிலும் இர...
165
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
. “அப்படியா? ஆனால் நானும் ரொம்ப ரொம்ப முக்கியமான மனுஷன்தான்!” என்றான் வந்தியத்தேவன். அதைக் கேட்ட அவ்வீரன் புன்னகை செய்துவிட்டு, “தஞ்சைக்கு எதற்காகப் போகிறாய்?” என்றான். “என் சித்தப்பா தஞ்சையில் இருக்கிறார்; அவருக்கு நோய் என்றறிந்து பார்க்கப் போகிறேன்” என்று கூறினான் வந்தியத்தேவன். “உன் சித்தப்பா தஞ்சையில் என்ன செய்கிறா...
166
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ந்து பார்த்தான். மீண்டும் உற்றுப் பார்த்தான்; கண்ணிமைகளை மூடித் திறந்து மேலும் பார்த்தான்; பார்த்த கண்கள் கூசின! பேசிய நாக் குழறியது. தொண்டையில் திடீரென்று ஈரம் வற்றியது. “இல்லை, இல்லை! தாங்கள்.. பழுவூர் இழவரசி!.. பளுவூர் இரவளசி… உங்கள் ஆட்களின் குதிரை என் பல்லக்கை இடித்தது!…” என்று உளறிக் கொட்டினான். இதெல்லாம் கண் மூட...
167
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
நின்ற வீரர்கள் தங்கள் எஜமானியின் கட்டளைக்கு எதிர்பார்த்துக் காத்திருந்ததாகத் தோன்றியது. அந்தப் பெண்ணரசி கையினால் ஒரு சமிக்ஞை செய்யவே, அவர்கள் உடனே அகன்று போய்ச் சற்றுத் தூரத்தில் விலகி நின்றார்கள். இரண்டு வீரர்கள் பல்லக்கின் மீது மோதிக் கொண்டு நின்ற குதிரையைப் பிடித்துக் கொண்டார்கள். பல்லக்கிலிருந்த பெண்ணரசி வந்தியத்தே...
168
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கொண்டு வந்து மோதி நிறுத்தினாய்?” இதற்குத் தக்க மறுமொழி சொல்லித்தான் ஆக வேண்டும். சொல்லாவிட்டால்…? நல்லவேளையாக, ஏற்கெனவே அந்த மறுமொழி வந்தியத்தேவன் உள்ளத்தில் உதயமாகியிருந்தது. சற்றுத் தணிந்த குரலில், பிறர் கேட்கக் கூடாது என்று வேண்டுமென்றே தணித்த அந்தரங்கம் பேசும் குரலில், “தேவி! நந்தினி தேவி! ஆழ்வார்க்கடியார்…அவர் தா...
169
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ுடன் வாங்கிக் கொண்டான். ஒருகணம் பனை இலச்சினை பொறித்த அந்தத் தந்த மோதிரத்தைப் பார்த்தான். மறுபடி நிமிர்ந்து ராணிக்கு வந்தனம் கூற எண்ணிய போது பல்லக்கின் திரைகள் மூடிக் கொண்டிருந்தன. ஆகா! பூரண சந்திரனை ராகு கவ்வும் போது சிறிது சிறிதாகக் கவ்வுகிறது. ஆனால் இந்தப் பல்லக்கின் திரைகள் அந்தப் பேசும் நிலா மதியத்தை ஒரு நொடியில் க...
170
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மங்கை எங்கே? இவளுடைய ஒரு புன்னகையைப் பெறுவதற்காக அந்தக் கிழவர் என்ன காரியந்தான் செய்யமாட்டார்?… வெகு நேரம் சாலை ஓரத்தில் நின்று இவ்விதச் சிந்தனைகளில் ஆழ்ந்திருந்த பிறகு, வந்தியத்தேவன் குதிரை மேல் ஏறிக் கொண்டு மெள்ள மெள்ள அதைத் தஞ்சைக் கோட்டையை நோக்கிச் செலுத்தினான். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் பிரதான கோட்டை வாசலை அட...
171
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
க் கொள்ள அவன் விரும்பவில்லை. அதிலிருந்து வீண் வாதமும் சண்டையும் மூளலாம். இப்போது தனக்குக் காரியம் முக்கியமே தவிர வீரியம் பெரிது அல்ல; வீண் சண்டைகளில் இறங்க இது தருணமல்ல. எனவே, வந்தியத்தேவன் கோட்டை வாசலைக் கவனிக்கக்கூடிய இடத்தில் வீதி ஓரத்தில் ஒதுங்கி நின்றான். பக்கத்தில் கம்மென்று மலரின் மணம் வீசியது. திரும்பிப் பார்த்...
172
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கேட்டன. நகரா முழங்கும் சத்தம், பறைகள் கொட்டும் சத்தம், கொம்புகள் ஊதும் சத்தம் இவற்றுடன் பல நூறு மனிதர் குரல்களிலிருந்து எழுந்த வாழ்த்தொலிகளும் கலந்து எதிரொலி செய்தன. வேளக்கார வீரர் படைகளைப் பற்றி வந்தியத்தேவன் நன்கு அறிந்திருந்தான். பழந்தமிழ் நாட்டில், முக்கியமாகச் சோழ நாட்டில் இது முக்கிய ஸ்தாபனமாக இருந்து வந்தது. ‘வே...
173
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பாம், பபாம்’ என்று ஊதிக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கும் பின்னால் வந்த வீரர்கள் ஆயிரம் பேர் இருக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் பின்வரும் வாழ்த்தொலிகளை இடிமுழக்கக் குரலில் எழுப்பிக் கொண்டு வந்தார்கள். “பராந்தக சோழ பூமண்டல சக்கரவர்த்தி வாழ்க!” “வாழ்க, வாழ்க!” “சுந்தர சோழ மன்னர் வாழ்க!” “வாழ்க! வாழ்க!” கோழி வேந்தர் வாழ்...
174
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பட்சணக் கடையில் புகுந்து ஒரு கூடை நிறைய அதிரசத்தை எடுத்துக் கொண்டு வந்து மற்ற வீரர்களுக்கு விநியோகித்தான்.பிறகு வெறும் கூடையைக் கடைக்காரனுடைய தலையிலே கவிழ்த்த போது, வீரர்களும் வீதியில் சென்றவர்களும் ‘ஹஹ்ஹஹ்ஹா’ என்று இரைந்து சிரித்தார்கள். இன்னொரு வீரன் வழியில் எதிர்ப்பட்ட ஒரு மூதாட்டியின் கையிலிருந்த பூக்கூடையைப் பிடுங...
175
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
களின் குடும்பத்தாருக்கும் அவ்வுரிமை உண்டு என்று வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான். எனவே, இராத்திரியே கோட்டைக்குள் போக வேண்டும் என்ற உத்தேசம் அவனுக்கு மாறி விட்டது. தன்னிடமிருந்த இலச்சினை மோதிரத்தைக் காட்டிச் சோதனை செய்ய வந்தியத்தேவன் விரும்பவில்லை. அதை விட இரவு கோட்டைக்கு வெளியிலேயே தங்கி நகரைச் சுற்றிப் பார்த்து விட்டு ...
176
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ப் பழங்களும் வேறு பலவிதக் கனிகளும் மலை மலையாகக் குவிந்து கிடந்தன. பூக் கடைகளைப் பற்றியோ சொல்ல வேண்டியதில்லை. முல்லையும் மல்லிகையும் திருஆத்தியும் செண்பகமும் புஷ்பக் குன்றுகளைப் போல் காட்சி தந்தன. அந்த மலர்க் குன்றுகளைச் சுற்றிப் பெண்மணிகள் வண்டுகளைப் போல் ரீங்காரம் செய்து கொண்டு மொய்த்தார்கள். புஷ்பக் கடைகளினருகில் சென...
177
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
விட்ட நிவந்தம் உண்டு. தற்சமயம் நானும் என் தாயாரும் இந்தக் கைங்கரியத்தைச் செய்து வருகிறோம்.” “தளிக்குளத்தார் கோயில் செங்கல் திருப்பணியா? அல்லது கருங்கல் பணி செய்திருக்கிறார்களா?” என்று வல்லவரையன் கேட்டான். அவன் வருகின்ற வழியில் பல செங்கல் கோயில்களுக்குக் கருங்கல் திருப்பணி நடந்து கொண்டிருப்பதைப் பார்த்திருந்தபடியால் இவ்...
178
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ுந்தால்…” “தம்பி! உன் பெயர் என்ன?” என்று வந்தியத்தேவன் கேட்டான். “அமுதன்; சேந்தன் அமுதன்.” “அடடா! எவ்வளவு நல்ல பெயர்? கேட்கும்போதே என் நாவில் அமுது ஊறுகிறதே… எனக்கு இஷ்டமாயிருந்தால் உன்னுடைய வீட்டுக்கு வந்து தங்கலாம் என்றுதானே நீ சொல்லத் தொடங்கினாய்?” “ஆமாம், அது எப்படி உங்களுக்குத் தெரிந்தது?” “என்னிடம் மந்திர வித்தை ...
179
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
து என்று தெரிந்து விட்டது. அந்த மூதாட்டி பேசும் சக்தியற்ற ஊமை, காதும் கேளாது என்று தெரிந்தது. ஆனால் அந்த மாதரசியின் முகத்தில் கருணையும் அன்பும் நிறைந்து ததும்பியதை வந்தியத்தேவன் கண்டான். கூரிய அறிவின் ஒளியும் அம்முகத்திலிருந்து வீசியது. பொதுவாக, ஏதாவது ஒரு அங்கத்தில் ஊனமுற்றவர்கள் மற்றபடி சிறந்த அறிவுக் கூர்மையுள்ளவர்க...
180
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
டரையரின் தலைமையில் தஞ்சைக் கோட்டையைக் காவல் புரிந்த வீரர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் அங்கேயே தங்கியிருந்தார்கள். பொன், வெள்ளி நகை வியாபாரிகளும், நவரத்தின வியாபாரிகளும், பொன்னாசாரிகளும் கோட்டைக்குள் இடம் அளிக்கப்பட்டிருந்தார்கள். பெரிய பழுவேட்டரையரின் கீழ் வரி விதிக்கும் வேலை பார்த்த நூற்றுக்கணக்கான அலுவலர்கள் இருந...
181
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பெரும்பாலும் யோகத்திலும் தியானத்திலும் பூஜையிலும் காலம் கழிப்பதாகக் கேள்வி.” “ஆனாலும் இத்தனை நாளைக்குப் பிறகு கலியாணம் செய்து கொண்டிருக்கிறாரே?” “ஆமாம்; அது கொஞ்சம் வியப்பான காரியந்தான். கலியாணத்துக்குப் பிறகு மாப்பிள்ளைத் தேவரின் மனமே மாறிப் போயிருப்பதாயும் சொல்கிறார்கள்; நமக்கென்ன அதைப் பற்றி? பெரிய இடத்துப் பேச்சுப்...
182
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தியத்தேவன் ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டான்!…. சீச்சீ! என்ன உதாரணம்! இந்தப் புவன மோகினியான சுந்தராங்கியைப் படமெடுத்த பாம்புக்கா ஒப்பிடுவது? இவளுடைய பால்வடியும் முகத்தை ஒரு தடவை பார்த்தாலும் பசி தீர்ந்து விடுமே?… நாளைக்கு அவளை மறுபடி காணப்போகிறோமல்லவா! அவளுடைய குரலிலேதான் என...
183
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ன் ஒரு கையில் குடலையும் இன்னொரு கையில் அலக்கும் வைத்துக் கொண்டு, வாயினால் பாடிக் கொண்டே, கொன்றை மலர்களைப் பறித்துக் கொண்டிருந்தான். அதிகாலையிலே எழுந்து ஸ்நானம் செய்து திருநீறு புனைந்திருந்த சேந்தன் அமுதன், சிவபக்தனாகிய மார்க்கண்டனைப் போல் தோன்றினான். இப்படி இனிமையாகவும் அழகாகவும் பாடும் பிள்ளையின் குரலைக் கேட்க அவனுடைய...
184
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
இருந்ததா என்று நாம் சொல்ல முடியாது. காலை உணவுக்குப் பிறகு சேந்தன் அமுதன் உச்சிவேளை பூஜைக் கைங்கரியத்துக்காகப் பூக்குடலையுடன் கிளம்ப, வந்தியத்தேவன் சக்கரவர்த்தியின் தரிசனத்துக்காகப் புறப்பட்டான் இருவரும் நடந்தே சென்றார்கள். கோட்டைக்குள் குதிரையைக் கொண்டு போக வேண்டாம் என்று வல்லவரையன் முன்னமேயே தீர்மானித்திருந்தான். குத...
185
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
நிற்கும்…” “உன் மாமன் மகளின் பெயர் பூங்குழலியா? அழகான பெயர்!” “பெயர் மட்டுந்தானா அழகு?” “அவளும் அழகியாகத்தான் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், நீ இவ்வளவு பரவசமடைவாயா?” “மானும் மயிலும் அவளிடம் அழகுக்குப் பிச்சை கேட்க வேண்டும். ரதியும் இந்திராணியும் அவளைப் போல் அழகியாவதற்குப் பல ஜன்மங்கள் தவம் செய்ய வேண்டும்.” சேந்தன் அம...
186
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பற்றிப் பேச வேண்டும்? முக்கியமாக, உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். நீங்கள் கோட்டைக்குள் போகிறீர்கள்; கோட்டைக்குள் பழுவேட்டரையர்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம் பேசினால் ஆபத்து வரும்!…” “ஏது தம்பி, ஒரேயடியாகப் பயமுறுத்துகிறாயே?” “உண்மையைத்தான் சொல்கிறேன் மெய்யாக, இரண்டு பழுவேட்டரையர்களுந்தான் இப்போது சோழ சாம்ராஜ்யத்தை...
187
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சுந்தர சோழரின் உடம்பைப் பற்றி எல்லாரும் சொல்லுகிறார்கள். ஆனால் என்ன நோய் என்று மட்டும் யாருக்கும் தெரிவதில்லை.” “தெரியாமல் என்ன? சக்கரவர்த்திக்குப் பக்கவாதம் வந்து இரண்டு கால்களும் சுவாதீனம் இல்லாமல் போய் விட்டன.” “அடடா! அதனால் அவரால் நடக்கவே முடிவதில்லையோ?” “நடக்க முடியாது; யானை அல்லது குதிரை மீது ஏறவும் முடியாது; படு...
188
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
தயிர் விற்பவர்கள், பூக்கூடைக்காரர்கள், கறிகாய் விற்பவர்கள், பழக் கடைக்காரர்கள், மற்றும் பல தொழில்களையும் செய்வோர், கணக்கர்கள், உத்தியோகஸ்தர்கள் முதலியோர் ஏகக் கூட்டமாகக் கோட்டைக்குள் பிரவேசிக்க முயன்று கொண்டிருந்தார்கள். கோட்டைக் கதவின் திட்டிவாசலைத் திறந்து அவர்களை ஒவ்வொருவராக உள்ளே விடுவதிலே கோட்டை வாசற் காவலர்கள் தங...
189
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
வளர்ந்திருந்த விருட்சங்கள் செம்மண் பூமியின் சத்தை உண்டு, கொழு கொழுவென்று செழித்து ஓங்கியிருந்தன. புன்னை, தென்னை, அசோகம், அரசு, ஆல், பலா, வேம்பு முதலிய மரங்களில் அடர்ந்து தழைத்திருந்த இலைகள் மரகதப் பச்சையின் பல சாயல்களுடன் கண்ணுக்கு இனிமையையும் மனத்துக்கு உற்சாகத்தையும் அளித்தன. அதிசய சக்தி வாய்ந்த மந்திரவாதியான மயன் பு...
190
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஆகையால், யாரையும் வழி கேட்காமலேயே சக்கரவர்த்தியின் அரண்மனையைக் கண்டுபிடித்துப் போய்விட வேண்டும்; அது அப்படியொன்றும் முடியாத காரியமாயிராது… எந்தப் பக்கம் நோக்கினாலும் மாடமாளிகைகளின் மீது மகர தோரணங்களும் கொடிகளும் தோன்றின. வேகத்துடன் வீசிய மேலக்காற்றுடன் அவை துவந்த யுத்தம் செய்து சடசட படபடவென்று சத்தம் செய்து கொண்டு பறந...
191
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
“யாரைக் கேட்கிறாய், தம்பி! சின்னவர் அரண்மனையில்தான் இருக்கிறார்.” “அது எனக்குத் தெரியாதா? நடுநாட்டுக்குச் சென்றிருந்த பெரியவரைப் பற்றித்தான் கேட்கிறேன்.” “ஓ! பெரியவர் நடுநாட்டுக்கா சென்றிருந்தார்? அது எனக்குத் தெரியாது. நேற்று மாலை இளையராணியின் பல்லக்குத் திரும்பி வந்தது. பெரிய அரசர் இன்னும் வரவில்லை; இன்று இரவு திரும...
192
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மெள்ளப் பேசிக் கொண்டார்கள். வந்தியத்தேவன் மற்றவர்களைப் போல் சிறிதும் தயங்கி நிற்கவில்லை. வேகமாகவும் மிடுக்காகவும் நடந்து சென்று அரண்மனைப் பாதைக் காவலர்களை நெருங்கினான். உடனே இரு குதிரைகளும் முகத்தோடு முகம் உராயும்படி வழி மறித்து நின்றன. குதிரை மேலிருந்தவர்கள், கீழே நின்றவர்கள், அனைவருடைய வேல்களும் முனையோடு முனை பொருந்...
193
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ஆஸ்தான மண்டபத்தில் இருக்கிறார் அவரிடம் கொண்டு போய்விடு!” என்றான். “புலவர்களே! ஏதாவது பரிசு கிடைத்தால் போகும்போது இந்த வழியாகவே திரும்பிச் செல்லுங்கள்! பரிசு கிடைக்காவிட்டால் வேறு வழியாகப் போய்விடுங்கள்!” என்று மேலும் அவன் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் சிரித்தார்கள்! சற்று நின்று இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த ...
194
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
மலர்ந்து விடும். நாடெங்கும் உள்ள வாலிப வீரர்களைத் தம்முடைய காவல் படையில் சேர்த்துக்கொள்வதில் அவருக்கு மிக்க ஆர்வம். “தளபதி! நான் காஞ்சீபுரத்திலிருந்து வந்தேன்! இளவரசர் ஓலை கொடுத்து அனுப்பினார்!” என்று பணிவான குரலில் வந்தியத்தேவன் மறுமொழி சொன்னான். காஞ்சீபுரம் என்றதும் சின்னப் பழுவேட்டரையரின் முகம் கடுத்தது. “என்ன? என்...
195
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
கள்…” “இரு, இரு! பிறகு சாவகாசமாகக் கேட்டுக் கொள்கிறேன். முதலில் நீயே இந்த ஓலையைச் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு வா! அப்புறம் தமிழ்ப் புலவர்கள் வந்து விடுவார்கள். வளவளவென்று பேசிக் கொண்டிருப்பார்கள்… இந்தப் பிள்ளையைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போ!” என்று அருகில் நின்ற வீரன் ஒருவனுக்குச் சின்னப் பழுவேட்டரையர் கட்டள...
196
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
ருந்தாள். அவளைப் பார்த்து, “தேவி! உன் புதல்வனிடமிருந்து ஓலை வந்திருக்கிறது!” என்று சொல்லிவிட்டுப் படித்தார். “ஆகா! இளவரசன் காஞ்சியில் பொன் மாளிகை கட்டியிருக்கிறானாம். நீயும் நானும் அங்கு வந்து சில நாள் தங்கியிருக்க வேண்டுமாம்!” என்று சொல்லிய போதே, சக்கரவர்த்தியின் முகம் முன்னைவிடச் சுருங்கியது. “தேவி! உன் புதல்வன் செய்...
197
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
அந்த வகையிலும் தங்களுக்குப் பொன்மாளிகை எடுத்தது பொருத்தமானதே!” என்றான் நம் வீரன். சுந்தர சோழர் மறுபடியும் மலையமான் திருமகளை நோக்கி, “தேவி! இந்தப் பிள்ளை எவ்வளவு புத்திசாலி, பார்த்தாயா? நம்முடைய ஆதித்தனுக்கு இவனையொத்தவர்களின் உதவியிருந்தால், அவனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவனுடைய அஜாக்கிரதை சுபாவத்தைப் பற்றி...
198
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
பெருமக்கள்! கவிஞர் சிகாமணிகள்! தமிழ்ப் பெருங்கடலின் கரை கண்டவர்கள்! அகத்தியனாரின் வழி வந்தவர்கள்! தொல்காப்பியம் முதலிய சங்க நூல்களைக் கரைத்துக் குடித்தவர்கள்! சிலப்பதிகாரம் முதலிய ஐம்பெருங் காவியங்களைத் தலைகீழாகப் படித்தவர்கள்! தெய்வத் தமிழ் மறையான திருக்குறளையும் ஒரு கை பார்த்தவர்கள்! இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் அறிந...
199
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512
சக்கரவர்த்தி. தரையில் விரித்திருந்த ரத்தின ஜமக்காளத்தில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். அதுதான் சமயமென்று நமது வீரன் வல்லவரையனும் புலவர் கூட்டத்துடன் கலந்து உட்கார்ந்து கொண்டான். தான் சொல்ல விரும்பியதை முழுதும் சக்கரவர்த்தியிடம் சொல்லாமல் போக அவனுக்கு மனம் இல்லை. சந்தர்ப்பம் ஒரு வேளை கிடைத்தால் சொல்லிவிட்டுப் போகலாம் என்...
200
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
பொன்னியின் செல்வன்
512